Tuesday, December 1, 2009


Wednesday, November 11, 2009

Thursday, October 15, 2009

Sunday, October 11, 2009

மறைவிடம்...

சிரித்தோடி சில்வண்டு பிடித்து
சிறைப்பட்ட வண்டை
மறைக்க தேடிய மறைவிடம்...

சீருடையணிந்து சிலேடில் கிறுக்கிய
பொம்மையை ஆசிரியர் கண்படாமல்
தோள்பையில் மறைக்க தேடிய
மறைவிடம்...

வயது வித்யாசமின்றி
திடீரென தோன்றும் காதலை
உணர்ச்சியின் உலைகளுக்கு
பிடிபடாமல் மறைக்க தேடிய
மறைவிடம்...

அரைசாண் வயிற்றுக்கு
ஆடை களைந்து சேமித்த பணத்தை
ஆணித் துணையுடன் தொங்கும்
ஆண்டவன் புகைப்படத்தின் பின்னே
மறைக்க தேடிய மறைவிடம்....

சிரித்துக் கொண்டே
சிகப்பு விளக்கு பெண்ணிடம்
கைநீட்டி வாங்கிய பாவத்தை
அரசளித்த ஆடையில் ஆண்மையின்றி
மறைக்க தேடிய மறைவிடம்..

ஆயிரமாயிரம் மறைவிடம் தேடி
தேடியதை மறைப்பதற்குள்
ஆறடி மறைவிடத்துக்குள் மனிதன்....

-ஜீ.கே

Friday, September 25, 2009

அந்த நிமிடங்களில்...

எழுதி களைத்த பேனாவும்
பக்கம் முடிந்த நாட்குறிப்பேடும்
மீண்டும் என் கைப்படாமல்
என்னை விட்டு விலகும்
அந்த நிமிடமும்...

சலவை செய்த ஆடை என் நிமித்தம்
பட்டையில் கரையேற்றி
மறுப்பேதும் இல்லாமல் மறுபடி
சலவைக்கல்லில் ஓங்கி அறையப்படும்
அந்த நிமிடமும்...

சிறுகதை பேசி சில சமயம்
சிந்தனை செய்யும் போது
புகைத்து முடித்த சிகரெட் துண்டை
ஆஸ்ட்ரையில் புதைத்த
அந்த நிமிடமும்...

சக்கரமாய் சுழலபோகிறாய்
என்றுரைத்த நேற்றைய தேதி
என் கைப்பட கிழித்தெறிந்து
இன்றைய குப்பைத்தொட்டியில் உறங்கும்
அந்த நிமிடமும்...

எனக்குள் சிரிப்பையும்
மெளன அழுகையையும்
ஆழமான சிந்தனையும் தந்த
தொலைக்காட்சி இணைப்பை துண்டித்த
அந்த நிமிடமும்....

நாக்கை சுட்டுவிட்டதால்
திட்டிக் கொண்டே
தேநீர் கோப்பை
காலியாகிவிட்டத்தை நினைத்த
அந்த நிமிடமும்...

மின்சாரத் துணையுடன்
என் சுகத்துக்காய் தொடர்ந்தோடிய
மின்விசிறியின் இயக்கத்தை
ஒரு விசையில் நிறுத்திய
அந்த நிமிடமும்...

உற்றார் அமர்ந்து ஊர் அமர்ந்து
நானமர்ந்த தருணத்தில் ஒரு கால்
ஊனமாகிப்போனது நாற்காலி
என் வலக்கை நாற்காலியின் ஒரு கால்
ஆகிப்போன அந்த நிமிடமும்...

பின் சென்று கொண்டே
என்னை முன் தள்ளும்
காலத்தின் சில காட்சிகளின்
இந்த_அந்த நிமிடமும்...

சுயநலகாரனாகவே
தோலுரிக்கப்படுகிறேன்
அந்தந்த நிமிடங்களில்...

Sunday, September 13, 2009

யதார்த்தங்கள்

யதார்த்தங்கள் சில சமயம்
காயங்களையே அர்ப்பணிக்கிறது...

இங்கு உன்னையும் என்னையும்
பற்றியுமான யதார்த்தங்கள்
வடம் பிடித்து இழுப்பவர்
ஆளுகைக்கு ஆட்பட்ட
ஆண்டவன் இல்லா தேர் போல்...

யதார்த்த மனிதர்கள்
யதார்த்த மனங்களை
ஏன் என்றே தெரியாமல்
கொய்து எறிகின்றனர்
யதார்த்தத்தின் ஆழம் புரியாமல்...

சிறு நடைப் பயணத்திலும்
சிற்றுண்டிச் சாலையிலும்
டீக் கடை கலாட்டாக்களிலும்
இலவச இணைப்பாகவே
மொழிப் பெயர்க்கப் படுகின்றன
நம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்
ஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...

சந்தர்ப்பங்களைத் தேடும்
சந்தர்ப்பவாதிகளுக்கு
சாசனம் கொடுக்கும்
சந்ததியினர் இருக்கும் வரை
காயச் சுவடுகளை நம் உள்ளங்களில்
பதித்துக் கொண்டே பயணிக்கும்
இது போன்ற சில யதார்த்தங்கள்.

Saturday, August 22, 2009

விடுதலை மரணங்கள்




பாதி புதைந்திருந்தாலும்
இறுக்கமாகவே
பற்றிக்கொண்டுள்ளது
நங்கூரம் என்னை ..
தத்தளித்துக் கொண்டே
தண்ணீரில்
தவம் செய்வதால்
மதம் பிடித்துவிடும்
என்றெண்ணி
என்னில்
இணைத்து உன்னை
மூழ்கடித்தானோ ????

மூழ்கினாலும் முட்டிய
இடத்திலேயே நிலையாய்
நிற்கிறாய் நீ
மடிக்குள் சிறைப்பட்டு
துடிக்கும் மீன்களின்
செதில்கள் தினம்
என்னில் சிதறுவதால்
சாத்தியமே எனது
தத்தளிப்புகளும்....

விடியட்டும்
விடுதலை கொடுப்பான்
மீனவன் இருவருக்கும்...
நம் விடுதலையின்
பின்னே
பல மரணங்கள் நிச்சயம்
ஆதலால்
என்னை இன்னும்
இறுகிப் பற்றிக்கொண்டு
மீள நினைக்காமல்
மூழ்கியே இரு ...






Tuesday, August 4, 2009

முழுதாய் வியக்கவிடு


நீ சிரித்ததும் இதழ்
மூடி மொட்டாகும்
பூக்கள் கண்டு
விந்தை கொண்டேன்....

உன் தேய்பிறை
புருவம் கண்டால்
பெளர்ணமியாம்...அன்று
தேய்பிறை கொண்ட
நிலவுக்கு...

வியப்பதற்குள் மீண்டும்
வியந்து நின்றேன்..
என்மீதான உனது
படையெடுப்பை
நிறுத்தி வைத்து
ஒரு நொடியாவது
என்னை முழுவதுமாய்
வியக்க விடு ...





Thursday, July 23, 2009

அன்றிலிருந்து இன்று வரை ...


வேறெதுவும் தெரியாதே
உன் நினைவுகளில் அடைப்பட்ட
இவனின் நெஞ்சத்திற்கு...
மஞ்சத்திருக்கும்
தெரிந்து விட்டதோ....இனி
இவன் உறங்கப்
போவதில்லையென
எள்ளி நகைத்து
ஏளனம் செய்கிறதே
ஓ..தலையணைக்குள்
நான் புதைத்த கண்ணீர்
கசிந்து விட்டதோ ...


விடுமுறை கொடுத்தும்
விலகாமல் கண்சிமிட்டியே
சிரிக்கின்றன எனதறையின்
மின்விளக்குகள்... கள்ளி
அதிலுமா உன் ஆட்சி...
இரு விடியட்டும்
விளக்கம் தேடலாமென
விழித்திருந்தேன் ......
சிறைபட்ட உன்
நினைவால் இரவு பகல்
தெரியவில்லை அன்றிலிருந்து
இன்று வரை ...

Tuesday, July 21, 2009

என் நட்பைத் தேடி


என் நட்பைத் தேடி...
பயணமேற்க்கொள்ளும்
போதெல்லாம்

உன் நினைவு பாதை மேல்
என் பயணங்கள்...

உன்னால் வரையப்பட்ட
கவிதை தோழி ..நான்

ஆதலால் இன்னும்
வரைவாகவே நம் நட்பு
உன் அன்பைத் தேடி

மீண்டும் மீண்டும்
எனது பயணங்கள் ..

உதிர்ந்த இடத்தில்
மீண்டும் துளிர்க்கும்
இலை போல்

உன் நினைவு என்னுள்
எழும்போதெல்லாம்
நொடிக்கொருமுறை
பிறப்பெடுக்கிறேன் நித்தமும்
ஜனித்த நோக்கமும்
புரிந்து விட்டது இன்று
ஜனனம் ஜனனம் இனி
உன்னில் சேரும் வரை ..........

Sunday, July 12, 2009

பட்டியலில்

உன் ஒருத்தியால்,

காணாமல் போனவர்கள் ,

பட்டியலில் என் பெற்றோரும்....

Friday, July 10, 2009

வீழ்த்தினாய் இன்றும்

நீண்ட வரி கவிதை பெண்ணே நீ
முற்றுப் புள்ளியாக நான்...
விழி பார்த்து முகம் பார்க்காமல்
வீழ்த்தினாய் நேற்று வரை ...
விளக்கமளித்தும் விளங்கவில்லை
வீழ்த்தினாய் இன்றும்...

மாலையிடு

உறங்கவே இல்லையடி நான்
நீ உதிர்த்த வார்த்தைகளால் ...


இரு கோர்வையாக்குகிறேன்
கல்லறையில் வந்தாவது மாலையிடு
...

Saturday, July 4, 2009

நீண்ட புருவத்தை

நிலை இல்லா கண்ணாடியில்

நிலை நாட்டினால்பெண்னொருத்தி_அதில்

சிவந்து சிரித்ததென்னவோ அவளின்

அடிக்கடி செல்போன் சிணுங்கள் மட்டுமே...

Friday, January 23, 2009

நினைவுகளில்



மார்புக் கூட்டில் மகிழம் பூக்களின்

மல்யுத்தம் மஞ்சள் மாலையில்

மறைந்திருந்து நீ பார்த்த முதல் ...

பகலிலும் விழா கோலம் பூனும் சொப்பனங்கள்

சாரல் நினைவுகளில் என் நித்திரையை

இரவுகளில் நீ ஆட்க்கொண்டதால் ...

என்னில் விளையாடும் சதுரங்கத்தில்

உன்னால் வெட்டுப்பட்டு விழும்போதெல்லாம்

சொர்க்கத்திலேயே விழ நேர்கிறது ...

இளஞ்சோலை நினைவுகளை இளமையாக்கிக் கொண்டே

நிதம் யுத்தம் செய்து என் செல்களை மட்டுமே

உயிரிழக்கச் செய்யும் உன் வெற்றிகள் ...

உன் விழி என்மீது படரும் நிமிடங்களில்

என் இதயத்தின் மௌன வாசலில்

தீபச் சுடர்களின் அரங்கேற்றம் .....

சீ ....போடீ!!! கோர்வையாக்க இயலவில்லை

எழுதும் என் கவிதையை

இதிலும் நீ வாசம் செய்வதால் ....

Saturday, January 17, 2009

பேசிவிடு




தார்ச் சாலையில் அவ்வப்போது
நதிகளின் சங்கமும் நிகழ்கிறது
நீ நடந்து வருகையில்
கூந்தல் விட்டு விடைபெறுவதால்
உடனே உயிர் துறக்கின்றன
நீ சூடிய மலர்கள் ....

மனதின் துக்கமும் இவன் மனதும்
உன் நிழல் தேடும் தருணங்களில்
இரவுகளே பதில் சொல்கின்றன...
ஒரு சில உன் மௌனங்களால்
மௌனமாய் எரிகிறேன் நான்.......
நீ விழி விட்டு விலகும் நொடியில்
ஸ்தம்பிக்கும் என் உலகங்கள்

ஒரு முறையேனும் பேசிவிடு என்னிடம்
இந்த ஆயுள் கடந்துவிடுவேன் ..

Wednesday, January 14, 2009

யார் தான் நீ???


சிறு சிறு கனவும் நீ
கனவின் நினைவும் நீ
இமைக்குள் விழியும் நீ
இமையோரம் வலியும் நீ
பகலில் இருளும் நீ
இருளின் நிலவும் நீ
படர்ந்த கொடியும் நீ
கொடியின் மலரும் நீ
உயிருட்டும் உணர்வும் நீ
உணர்வின் குருதியும் நீ
பனியின் உருகலும் நீ
உருகலின் துளியும் நீ
என் இரவின் தவிப்பும் நீ
தவிப்பின் இதமும் நீ
எனதறையின் ஜன்னலும் நீ
வெளியே சுழலும் உலகமும் நீ
வாடை காற்றின் ஈரமும் நீ
ஈரத்தின் சாரமும் நீ
சொல்லின் வலிமையும் நீ
வலிமையின் பெண்மையும் நீ
பார்வையின் பிம்பமும் நீ
பிம்பத்தின் வண்ணமும் நீ
இவனின் காதலும் நீ
காதலின் காமமும் நீ
நதியின் வேகமும் நீ
வேகத்தின் சாரலும் நீ
மாலை மழையும் நீ
அதில் சிறு மின்னல் கீற்றும் நீ
விடையின் வினாவும் நீ
இது வரை இல்லா விளக்கமும் நீ

Sunday, January 11, 2009

ஆயுள் கைதியாய்




இமைக்கவும் மறந்து ....நீ சென்ற திசை நோக்கி

குவித்தேன் பார்வையை பல முறை

தற்ச்செயலாய் வெட்டிச் சென்ற உன் ஒரு நொடி பார்வையால் !!!

நேரில் நீ பேசிய வார்த்தைகளும் ஒழுங்கு பெறவில்லை என்னருகில் நீ வாசம் செய்த போது ......

வளர்ந்து தேயும் பிறை போல
நீ நகர்ந்த பின் கோர்வையாக்கினேன்
காற்றின் வழி கலந்து என் செவி சேர்ந்த
உன் உரையாடலை ...
அப்பொழுதும் நீ விட்டு சென்ற
அச்சம் மட்டுமே மிச்சமாய் ..

வாசலில்லா முற்றத்திலும் முட்ட நேர்ந்தது
வாஞ்சையான உன் வார்த்தைகளால் ...
இரவெல்லாம் கனாக்களில் ஆட்கொண்டது போதாமல்
கண் விழிக்கையிலும் உன் முகம் ..
கோடையிலும் பனித்தென்றல் என்னுள்
நீயும் நானாகிப் போனதால்
ஒழுங்கற்றே முடிகிறது எனது கிறுக்கல்களும்
வரைவும் நீயாகிப் போனதால் .....
தப்பிச் செல்ல வழி இல்லாமல்
ஆயுள் கைதியாய் உன் நினைவுச்
சிறைதனில்















Saturday, January 10, 2009

மலைமகள்


செந்நிற மேனியாள் பச்சை பட்டுடுத்தி
நெற்றியில் கதிரவனை திலகமிடும் நேரம்
தோள்தனில் அமர்ந்து காதல் பேசி
கலைகின்ற வெண்மேகங்களும்
சர சர சப்தங்களுடன் இறந்து சரியும்
சருகுகளின் ஸ்பரிஷமும்
ஆயிரம் கிளைகள் கொண்டாலும்
அமைதியாய் பறவை இசை கேக்கும் மரங்களும்
அதிகாலை பனி படர காத்திருக்கும் இலைகளும்
கண்ணுக்கும் தெரியாமல் கைகள் இல்லாமலும்
முடிக்கற்றை கலைக்கும் இளங்காற்றும்
மறைத்திருந்த விண்மீன்கள் விழித்துக்கொள்ள
கிழக்கு நோக்கி பயணிக்கும் கதிரவனும்
என் சுவாச பையில் உரிமையுடன்
வாசம் செய்யும் காட்டுப்பூக்களின் நறுமணம் மிகுந்த
அத்துமீறல்களும் ,கன்னக்குழி பள்ளங்கள்
இடரும் போது கைகொடுக்கும்
ஆலமர விழுதுகளும்
காணாமல் போகும் கானல் நீர் காலங்களில்
பல நிமிடம் எனை திறந்து
உனக்குள் மறைந்தேன் உனதழகில்
மலைமகளே .....

Thursday, January 1, 2009

சில தருணங்கள்


மரணப்படுக்கையில் இருப்பவனைப் பார்த்து
ஒன்றும் பயமில்லை என்று கூறி
அவனின் இறுதிக் கதவும் சாத்தப்பட்டத்தை
அறிந்து அழாமல் நான் நின்ற போதும்...

உணவு வேளையில் இளைப்பாறவும் சில நேரத்தில்
வாத்தியார் கையில் எதிரியாகவும் இருந்த
பள்ளி புளியமரம் வேரோடு சாய்ந்தது ஒரு மழைக்காலத்தில்
என் கதை கேட்கும் பேசா தோழன் மறைந்த போதும்...

பத்து மாதம் சுமந்தால் தாய்,பல வருடம் சுமந்தால்?
காலத்தின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க....என்னை
இருபத்தியொரு வருடம் சுமந்த வீட்டை விட்டு
பேருந்து பயணத்தில் நான் இருந்த போதும் ...!

குழலினிது யாழினிது.....மழலைச் சொல் என்ற
குறள் பாடிய எங்கள் தமிழ் ஆசிரியை
குழந்தை வரம் வேண்டி துதிப்பாடினாள் கருவறை கடவுளிடம் ..
அவளை நான் கடந்து சென்ற போதும்...!

எனது நினைவுகளுக்கு உறுதியான
உயிரோட்டத்தைகொடுத்துக் கொண்டே
தனது உயிரை சிறுகச் சிறுக மாய்த்துக் கொள்ளும்
என் பேனாவின் நிலையை எண்ணிய போதும்...

இருள் என்ற இயற்கையை நீக்க
என்னதான் பிரகாசமாய் தீபம் எரிந்தாலும்
அதில் தினமும் தீக்குளிக்கும் பல ஆயிரம்
விட்டில் பூச்சிகளை காண நேரும் போதும்....!

தண்ணீரிலே இருந்தாலும் பசுமை காணா!
மரங்களை பார்க்கும் போதும்..முற்று பெறாமல்
முடிந்த இந்த கவிதையின் மீத வரிகள்
மீண்டும் மீண்டும் என்னுள் எழும்போதும்....

கனமான இதயத்துடன் தான்
சில தருணங்களை கடக்கின்றேன் ....
ஆம் .....வலியுடன் ....!!!!!!

என் தோழியானவள்


என் தோழியைப் பற்றி சொல்லப் போவதால்
சிறிது கர்வத்துடன் வாசம் செய்கிறேன் ...

உனக்கே தெரியாது இதழோரம்
புன்னகை வாழ்ந்து கொண்டிருக்கும்
இவள் உன்னிடம் பேசும் போது ..அதுவும்
உனக்காய் உன் மனதுக்கு மட்டுமாய் ...

காதலிப்பதால் மட்டுமே
மறக்கப் படுவதில்லை உலகம் ...
இவள் நட்பு கிடைத்த பிறகு
நான் வாழ்ந்த உலகத்தை மறந்ததால் ...

ஒரு நாள் மட்டும் இவளின் நட்போடு
வாழ்ந்தால் போதும் என என்னும் மூடன் அல்ல
ஒவ்வரு நாளும் இவள் நட்பென்ற சுவாசத்தில்
உயிர் வாழ துடிக்கும் சுயநலக்காரன் தான் நான்.....


நிலவானவள்,வெள்ளி நீரோடையானவள்
பனியானவள்,பசும்பொன்னானவள்
என்று பொய் சொல்ல விரும்பவில்லை...

ஏனெனில் தன் பெருமை சொல்ல
இவளை அணிந்து கர்வம் வர
வலம் வருகின்றன இயற்கைகள் ...

பகலிலும் விண்மீன்கள் தோன்றுவதால்
காதல் கொள்வாய் நீயும்
உங்களின் நட்பின் மீது.........

உன்னுடனே போர் புரியும்
உன் புலன்கலனைத்தும் ....மீண்டும் சந்திப்போம்
என்று நீ சொன்ன அந்த கணம் முதல்

எழுதி விட மறுத்த
என் பேனா கூட காத்திருகின்றன
காகிதத்தில் இவளின் அழுத்தங்களை வரைய....

எழுத வேண்டும் நிதம் இருமுறை என எண்ணினேன்.
ஆனால் நிமிடமும் போதவில்லை
உயிர் பெற்ற விட்ட எங்கள் நட்பால்

கற்பனையின் கனாக்காலங்கள் இல்லை இவை
அவளின் நட்புடன் கைகோர்த்து
நடக்கும் நிகழ்காலங்கள் ..


இவள் இல்லாமல் போனால் தோன்றி இருக்காது
இவ்வுலகில் கவிதைகளும் .......நாங்கள் பேசும்
நேரத்தில் புவியும் புள்ளியாகிப் போனதால் .....


ஒரு பக்கம் மட்டும் என்று எண்ணி
இரு பக்கமாய் தொடர்ந்து... முடிந்தும் விட்டது
அவளின் சுவடுகளை சுமந்து இப்புத்தகமும் ....


ஆம் ...நட்பின் உன்னத உணர்வுகளை
சில புத்தகங்களால் விழுங்கிவிட முடியாது
இவளைப் போன்ற தோழி கிடைத்து விட்டால் ..