Monday, April 19, 2010

திருஷ்டி சீற்றம்

எங்கள் நாக்கு துருத்தலின்
கோர அச்சுறுத்தல்
குழந்தைகளுக்காக அல்ல
முகம் கொண்ட உடலற்ற
உயிரே அற்ற மாயமான
எங்களைக் காட்டி பிஞ்சுகளை
அச்சுறுத்தும் நஞ்சு மனிதருக்கே
என் குடல் வாடும் பிரம்மன்
வறுமை அறிந்தே சிருஷ்டித்தான்
முகம் மட்டும் போதுமென திருஷ்டியாய்

Wednesday, April 14, 2010

காத்திருந்தது போல்
தூறத் தொடங்கியது
இத்தனை நாள்
மௌன மொழி பேசிய
மழைத் துளி
நாம் சேர்ந்த அன்று ...

உன் கன்னப் பருக்கள்
வேடம் பூண்டு இருவரையும்
ஆட்கொள்ளத் தொடங்கியது
மழைத்துளி ...நம்
தேநீர் பருகலின் போது

சாரலாய் நானுனைத்
தொடும் தருணங்களில் ..
வெக்கப்பட்டு தான்
கைவிடுகிறதோ?
மழைத்துளியை மேகங்கள்!!

ஒன்றையொன்று
துரத்திக்கொண்டே வரும்
மழைத்துளிகள் சிதறியதும்
கூடல் கொள்வதை கண்சிமிட்டி
விளக்கிய போது ..

மின்னல் சிணுங்கலுடன்
இமைகள் அகன்று
நீ முறைத்தப் பார்வையில்
தேநீர் கோப்பை சிவக்கிறது..

மழைநீர்த் திவளையாய்
நான் கண் சிமிட்டியதும்
உன் சிக்கன சிரிப்பில்
சில்லிட்டது தேநீர்..

மழை நின்றும் மரஇலைகளில்
தங்கும் மழைத் துளிப்போல்
நிரந்தரமாய் தங்கிகொண்டது
நம் பார்வையில் காதல் துளி ...