Friday, September 25, 2009

அந்த நிமிடங்களில்...

எழுதி களைத்த பேனாவும்
பக்கம் முடிந்த நாட்குறிப்பேடும்
மீண்டும் என் கைப்படாமல்
என்னை விட்டு விலகும்
அந்த நிமிடமும்...

சலவை செய்த ஆடை என் நிமித்தம்
பட்டையில் கரையேற்றி
மறுப்பேதும் இல்லாமல் மறுபடி
சலவைக்கல்லில் ஓங்கி அறையப்படும்
அந்த நிமிடமும்...

சிறுகதை பேசி சில சமயம்
சிந்தனை செய்யும் போது
புகைத்து முடித்த சிகரெட் துண்டை
ஆஸ்ட்ரையில் புதைத்த
அந்த நிமிடமும்...

சக்கரமாய் சுழலபோகிறாய்
என்றுரைத்த நேற்றைய தேதி
என் கைப்பட கிழித்தெறிந்து
இன்றைய குப்பைத்தொட்டியில் உறங்கும்
அந்த நிமிடமும்...

எனக்குள் சிரிப்பையும்
மெளன அழுகையையும்
ஆழமான சிந்தனையும் தந்த
தொலைக்காட்சி இணைப்பை துண்டித்த
அந்த நிமிடமும்....

நாக்கை சுட்டுவிட்டதால்
திட்டிக் கொண்டே
தேநீர் கோப்பை
காலியாகிவிட்டத்தை நினைத்த
அந்த நிமிடமும்...

மின்சாரத் துணையுடன்
என் சுகத்துக்காய் தொடர்ந்தோடிய
மின்விசிறியின் இயக்கத்தை
ஒரு விசையில் நிறுத்திய
அந்த நிமிடமும்...

உற்றார் அமர்ந்து ஊர் அமர்ந்து
நானமர்ந்த தருணத்தில் ஒரு கால்
ஊனமாகிப்போனது நாற்காலி
என் வலக்கை நாற்காலியின் ஒரு கால்
ஆகிப்போன அந்த நிமிடமும்...

பின் சென்று கொண்டே
என்னை முன் தள்ளும்
காலத்தின் சில காட்சிகளின்
இந்த_அந்த நிமிடமும்...

சுயநலகாரனாகவே
தோலுரிக்கப்படுகிறேன்
அந்தந்த நிமிடங்களில்...

2 comments:

  1. கழிந்த ஒவ்வொரு அந்த நிமிடமும் பற்றி சொன்ன விதம் அழகு..

    வழக்கம் போலவே அர்த்தங்கள் ஆயிரம் நிறைந்த கவிதை..

    ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ சுயநலமாகவே இருக்கிறார்கள்...

    சில நேரம் சுயநலவாதியாகயிருப்பது நன்றென்றாலும் பல நேரம் அது பாதகமாகவே போகிறது...

    வாழ்த்துகள் கணேஷ்...கவிதை நேர்த்தியாகயிருக்கிறது....

    ReplyDelete
  2. வாழ்த்தியதற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தோழி

    ReplyDelete