Thursday, March 17, 2011

உலரா துளிகள் ...

புறக்கணிக்கவே நினைத்தேன்
இந்த சாலையில் பயணிப்பதை ..

மாற்றுப்பாதையை பயன்படுத்தவும் என்ற
வாசகம் தாங்கிய பலகை பயணிக்க வைத்தது
புறக்கணிக்க நினைத்த சாலையில் ...

சிறுபிள்ளைதனமாய் ஆண்டவனிடம்
வரம் கூட கேட்கத் தோன்றுகிறது
கைகள் இறகாய் மாறி..இப்பாதையை
பறந்து கடந்து விடவேண்டுமென ..


கை கால் கழுத்தின்றி
கண்ணாடியினுள்ளே சிறைபட்டிருந்த
ஆடைக்கு விடுதலை கொடுத்திடவோ!
இல்லை விருப்பப்பட்டோ
வேண்டுமென கைகாட்டினான் மகன்..

என் ஆறு மாத ஊதியத்தை
சிறு காகிதத்தில் சுமந்து சிரித்தது
மகன் அடம் பிடித்த ஆடை..
அழகாய் இருந்தும் ஆயிரம்
பிழை சொல்லி அன்பாய்
வேறொன்றை பரிசளித்தேன் ..

கடந்தகால ஆடைக்கடை
என் பின்னோக்கி சென்ற பின்னும்
உணர்ச்சியற்ற சட்டைப்பையில்
உணர்வுடன் இன்னும் எதையோ
தேடிக்கொண்டிருக்கிறது என் வலது கை..

புறக்கணிக்கவே நினைக்கிறேன்
இச்சாலையில் பயணிப்பதை ...

கடந்து போன காலத்தில்
மகன் விட்ட கண்ணீர் துளிகள்
நிகழ்காலத்திலும் உலராமல்
இச்சாலையெங்கும் சிதறிக் கிடப்பத்தால்

புறக்கணிக்கவே நினைக்கிறேன்
இச்சாலையில் பயணிப்பதை ...

-Gk

Monday, July 5, 2010

நித்திரை கனவுகள்

சுழற்றி எறியப்படும் நாட்களில்
பின் சென்ற நாட்களின்
ஏக்கங்கள் கனவுகளாய்
உலா வருகின்றன உறக்கத்தில் ..

கண்ணீர் ஊறிய தலையணைகள்
கவசம் தேடுகிறது இரவுகளில்
ஊறிய தலையணையும்
ஒற்றியெடுத்த தோள் துண்டும்
பட்டிமன்றம் நடத்துகின்றன
மறுபக்கம் இல்லா பாயில்...

கஞ்சி குடிக்க மறந்தோடிய
பொழுதுகளில் கனகாம்பரம்
கேட்டனுப்பும் மனைவி
கனகாம்பரம் எல்லாம் வியர்வை
மணம் என்றாள் மாலையில்

குடித்த தண்ணீர் வயிற்றுக்குள்
இருந்தும் ஈரம் காணவில்லை
தொண்டைக்குழி நாளங்கள்..
விழித்ததும் தெரிந்தது
நித்திரையில் கனவுகளும்
ஏக்கங்களாய் !!!........
- ஜீ.கே

Monday, April 19, 2010

திருஷ்டி சீற்றம்

எங்கள் நாக்கு துருத்தலின்
கோர அச்சுறுத்தல்
குழந்தைகளுக்காக அல்ல
முகம் கொண்ட உடலற்ற
உயிரே அற்ற மாயமான
எங்களைக் காட்டி பிஞ்சுகளை
அச்சுறுத்தும் நஞ்சு மனிதருக்கே
என் குடல் வாடும் பிரம்மன்
வறுமை அறிந்தே சிருஷ்டித்தான்
முகம் மட்டும் போதுமென திருஷ்டியாய்

Wednesday, April 14, 2010

காத்திருந்தது போல்
தூறத் தொடங்கியது
இத்தனை நாள்
மௌன மொழி பேசிய
மழைத் துளி
நாம் சேர்ந்த அன்று ...

உன் கன்னப் பருக்கள்
வேடம் பூண்டு இருவரையும்
ஆட்கொள்ளத் தொடங்கியது
மழைத்துளி ...நம்
தேநீர் பருகலின் போது

சாரலாய் நானுனைத்
தொடும் தருணங்களில் ..
வெக்கப்பட்டு தான்
கைவிடுகிறதோ?
மழைத்துளியை மேகங்கள்!!

ஒன்றையொன்று
துரத்திக்கொண்டே வரும்
மழைத்துளிகள் சிதறியதும்
கூடல் கொள்வதை கண்சிமிட்டி
விளக்கிய போது ..

மின்னல் சிணுங்கலுடன்
இமைகள் அகன்று
நீ முறைத்தப் பார்வையில்
தேநீர் கோப்பை சிவக்கிறது..

மழைநீர்த் திவளையாய்
நான் கண் சிமிட்டியதும்
உன் சிக்கன சிரிப்பில்
சில்லிட்டது தேநீர்..

மழை நின்றும் மரஇலைகளில்
தங்கும் மழைத் துளிப்போல்
நிரந்தரமாய் தங்கிகொண்டது
நம் பார்வையில் காதல் துளி ...

Tuesday, December 1, 2009


Wednesday, November 11, 2009

Thursday, October 15, 2009