இந்த சாலையில் பயணிப்பதை ..
மாற்றுப்பாதையை பயன்படுத்தவும் என்ற
வாசகம் தாங்கிய பலகை பயணிக்க வைத்தது
புறக்கணிக்க நினைத்த சாலையில் ...
சிறுபிள்ளைதனமாய் ஆண்டவனிடம்
வரம் கூட கேட்கத் தோன்றுகிறது
கைகள் இறகாய் மாறி..இப்பாதையை
பறந்து கடந்து விடவேண்டுமென ..
கை கால் கழுத்தின்றி
கண்ணாடியினுள்ளே சிறைபட்டிருந்த
ஆடைக்கு விடுதலை கொடுத்திடவோ!
இல்லை விருப்பப்பட்டோ
வேண்டுமென கைகாட்டினான் மகன்..
என் ஆறு மாத ஊதியத்தை
சிறு காகிதத்தில் சுமந்து சிரித்தது
மகன் அடம் பிடித்த ஆடை..
அழகாய் இருந்தும் ஆயிரம்
பிழை சொல்லி அன்பாய்
வேறொன்றை பரிசளித்தேன் ..
கடந்தகால ஆடைக்கடை
என் பின்னோக்கி சென்ற பின்னும்
உணர்ச்சியற்ற சட்டைப்பையில்
உணர்வுடன் இன்னும் எதையோ
தேடிக்கொண்டிருக்கிறது என் வலது கை..
புறக்கணிக்கவே நினைக்கிறேன்
இச்சாலையில் பயணிப்பதை ...
கடந்து போன காலத்தில்
மகன் விட்ட கண்ணீர் துளிகள்
நிகழ்காலத்திலும் உலராமல்
இச்சாலையெங்கும் சிதறிக் கிடப்பத்தால்
புறக்கணிக்கவே நினைக்கிறேன்
இச்சாலையில் பயணிப்பதை ...
-Gk